வாய்மையே வெல்லும்

ஆதவ் அர்ஜுனா

நிறுவனர் - வாய்ஸ் ஆஃப் காமன்ஸ், அரசியல் வியூக வல்லுநர், சமூக சேவகர், விளையாட்டு திறன் நிர்வாகி

Aadhavarjuna
Aadhavarjuna

ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா அரசியல் வியூக வல்லுநராகவும் சமூக சேவகராகவும் செயற்பட்டு வருகிறார். மேலும், திறன் வாய்ந்த விளையாட்டு நிர்வாகியாகவும் சமத்துவ கருத்தாக்கத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவராகவும் அறியப்படுகிறார். முன்பு, 'அரைஸ் கேபிட்டல்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகச் செயலாற்றியவர், தற்போது இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனம் ஆகிய இரண்டின் தலைவராகவும் தமிழ்நாடு ஒலிம்பிக் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். விளையாட்டைத் தாண்டி, மாணவர்கள் மற்றும் ஆர்வமிக்க இளம் தலைமுறையினரை அர்த்தப்பூர்வமான அரசியல் பாதையில் வழிநடத்தும் பொருட்டு 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்ற மக்கள் அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். கூடுதலாக, தமிழ்நாட்டின் முதன்மை கட்சிகளில் ஒன்றாக இருக்கும் 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்' துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகிக்கிறார். கல்வியும் விளையாட்டும் சமூகத்தில் மாபெரும் புரட்சிக்கு வழிவகுக்கும் என்பதே ஆதவ் அர்ஜுனாவின் உறுதியான நம்பிக்கையாகும்.

 இளம் பருவம் மற்றும் படிப்பு

ஆதவ் அர்ஜுனா 12.04.1982 அன்று திருச்சியில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை விவசாயியாக பணியாற்றிய நிலையில், தாயார் நன்கு படித்திருந்த போதிலும் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகளை ஏற்றார். வறட்சி மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணமாக கெடுவாய்ப்பாக சிறு வயதிலேயே தனது அன்புத் தாயாரை இழந்த இளம் ஆதவ் அர்ஜுனா அவரது மாமா மற்றும் பாட்டியின் அரவணைப்பில்தான் வளர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியை ஒய்.டபள்யூ.சி.ஏ வில் முடித்த இவர், திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும்போது கூடைப்பந்து விளையாட்டில் தனக்கு இயல்பாக உள்ள ஆர்வத்தையும், திறனையும் கண்டறிந்தார். மேல்நிலைக் கல்வியை சிறப்பாக முடித்து, திறன் படிப்புதவித் தொகை கிடைத்து மெரிட்டில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் பாடத்திட்டத்தையும் தாண்டி வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தத்துவம் என தனது வாசிப்பை விசாலமாக்கியதோடு, விளையாட்டிலும் கடுமையாக உழைத்து தனது திறனை மேம்படுத்திக்கொண்டார்.ஒய்.டபள்யூ.சி.ஏ

கூடைப்பந்து 

கூடைப்பந்து விளையாட்டில் ஆதவ் அர்ஜுனா தொட்ட உயரங்களானது அவரது விடாமுயற்சிக்கும், அர்ப்பணிப்புக்கும், ஆழமான பற்றுறுதிக்கும் சான்று பகர்கிறது. 10ஆம் வகுப்பு படிக்கும்போது கூடைப்பந்து விளையாட்டு தனக்கு அறிமுகமான நிலையில், அதில் இயல்பான ஆர்வமும், அதற்கேற்ற உயரமான உடலமைப்பும் தனக்கிருப்பதை அவர் கண்டறிந்ததில் இருந்து அவரது விளையாட்டுப் பயணம் தொடங்கியது. தனது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக திருச்சி பிஎச்எல் மைதானத்தில் இரவு பகல் பாராது கடும் மன உறுதியுடன் அவர் செலுத்திய உழைப்புதான் எதிர்காலத்தில் அவர் தொடவிருந்த உயரங்களுக்கு அடித்தளம் அமைத்தது என்றால் அது மிகையாகாது. 

கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில், ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கான இட-ஒதுக்கீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) விடுதியில் தங்கி தனது கல்லூரி படிப்பை பயின்றார். தனது வழியில் எத்தனையோ தடைகள் இருந்தபோதிலும் அவை அனைத்தையும் உடைத்து, ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பயிற்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தனது விடுதி கூடைப்பந்து அணியின் தலைவரானார். 

மாவட்ட, மாநில, தேசிய அளவில் தொடர்ந்து முன்னேறி விளையாட்டுக் களத்தில் பல சாதனைகளை படைத்த திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் 2016ஆம் ஆண்டு வரை தேசிய அளவிலான கூடைப்பந்து வீரராக மிளிர்ந்தார். விளையாட்டுத்துறையின் மேம்பாடு குறித்து தொடர்ந்து சிந்தித்து வந்தவர் 2017ஆம் ஆண்டு விளையாட்டு நிர்வாகியாக தனது வெற்றிக் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுத ஆயத்தமானார். 

தலைமைத்துவம் மற்றும் அமைப்பு ரீதியான பங்களிப்புகள்

இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர்

2023ஆம்‌ ஆண்டு ஆதவ் அர்ஜுனா இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டது அவரது வாழ்வின் முக்கியமான கட்டமாகும். பல முனைகளிலிருந்தும் புதிது புதிதாக முளைத்த தடைகளைத் தாண்டி, கூட்டமைப்பின் ஜனநாயக மாண்பை காத்து நின்றதன் விளைவாக 39 வாக்குகளில், 38 வாக்குகளைப் பெற்று உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றார். 

05.07.2023 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் திரு. கிருஷ்ணா பட் அவர்கள் வழங்கிய நியாயமான தீர்ப்பால் நீதி நிலைநாட்டப்பட்டதன் விளைவாக ஆதவ் அர்ஜுனா இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வரலாறு படைத்தார். 

அவர் தலைவர் பொறுப்புக்கு வந்தவுடன், எந்தத் தாமதமுமின்றி இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக பல முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக நமது இந்திய வீரர்களுக்கு விளையாட்டுக்கான ஊட்டச்சத்து குறித்த தெளிவும், சர்வதேச சூழல் குறித்த புரிதலும் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு வெளிநாட்டு பயிற்சியாளரின் தலைமையில் தேசிய அளவிலான சிறப்பு முகாமை நடத்தினார். மேலும் இந்தியாவின் தேசிய அணிக்கென்று பிரத்யேகமாக உடலியக்க நிபுணர்கள், விளையாட்டு உளவியல் நிபுணர்கள், வலிமை மற்றும் பராமரிப்புக்கான நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உலகத்தரமான குழுவை அமைத்தார். இவையெல்லாம் இதுவரை இந்திய கூடைப்பந்து விளையாட்டில் வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்காத புதுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தேசிய அளவிலான வீரராக இருந்து, விளையாட்டின் நிர்வாகத் தலைமையை ஏற்றதால் வீரர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அதற்கேற்ப நுட்பமான திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறார். 

குறைந்த காலத்திலேயே இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக ஆதவ் அர்ஜுனா வகுத்த வியூகங்களுக்கு தக்க பலன்கள் கிடைத்தன.  சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (FIBA) நடத்தும் 16வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 9ஆவது இடத்தையும், 3x3 FIBA 18வயதுக்குட்பட்ட ஆடவருக்கான உலகக் கோப்பைத் தொடரில் 12ஆவது இடத்தையும் பிடித்தது. முத்தாய்ப்பாக 2022ஆம் ஆண்டு 3x3 ஆசிய விளையாட்டில் இந்திய ஆடவர் அணி மலேசியா, மகாவ், சீனா ஆகிய அணிகளை வீழ்த்திய நிலையில், அதே ஆசிய‌ விளையாட்டில் 5x5 போட்டியில் மகளிர் அணி இந்தோனேசியா மற்றும் மங்கோலியாவையும், 3x3 போட்டியில் மலேசியாவையும் வீழ்த்தியது. 

எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது தனித்திறமையாலும், சுய ஒழுக்கத்தாலும் கூடைப்பந்து விளையாட்டில் உச்சம் தொட்ட ஆதவ் அர்ஜுனா விளையாட்டில் லஞ்சம், சிபாரிசு  ஆகியவற்றை அறவே வெறுத்து அவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கான பணியில் இறங்கினார். இத்தகைய அறம் சார்ந்த நிர்வாக முன்னெடுப்புகளை பாராட்டி அவருக்கு 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஊடக நிறுவனமான ஆனந்த விகடனின் 'நம்பிக்கை விருது' வழங்கப்பட்டது. 

Aadhavarjuna

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத் தலைவர்

விளையாட்டு வீரராக இருந்த காலத்திலேயே தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டை அனுபவப்பூர்வமாக நன்கு உணர்ந்தவராக இருந்த ஆதவ் அர்ஜுனா அவற்றை சீர்திருத்தும் லட்சியத்தோடு சங்கத் தேர்தலில் 2017ஆம்‌ ஆண்டில் களமிறங்கி தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது சீறிய‌ தலைமையாலும், இடைவிடாத உழைப்பாலும் கொரோனா கொடுந்தொற்று காலத்தில் கூட சங்கத்தின் செயற்பாடுகளில் சுணக்கம் ஏற்பாடாத வண்ணம் துடிப்போடு செயலாற்றி மாநிலம் தழுவிய அளவில் நிர்வாகிகளிடையே நன்மதிப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சங்கத் தேர்தலில் மகத்தான வென்று தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவராக ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டிற்குள்ளும், மாநில எல்லைகளைக் கடந்தும் கூடைப்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கான பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். உதாரணமாக, போட்டித் தொடர்களுக்கான பரிசுத்தொகையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பன்மடங்கு உயர்த்தினார். ஊரக அளவில்கூட வீரர்களுக்கு தரமான ஊட்டச்சத்து கிடைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தினார். தேசிய அளவில் எத்தனையோ விளையாட்டுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இன்றளவும் பெரிய வேறுபாடுகள் நீடிக்கும் நிலையில், பாலின சமத்துவத்தில் ஆழமான பற்றுக்கொண்ட ஆதவ் அர்ஜுனா அந்த சமத்துவமற்ற நிலையை மாற்றி, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் நடத்தும் போட்டிகளில் ஆடவருக்கும், மகளிருக்கும் சமமான பரிசுத்தொகையை நடைமுறைப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கமாக போட்டிக்காக பேருந்திலும், ரயிலிலும் பயணம் மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டு‌ வீரர்களை முதன்முதலாக தனது சொந்த செலவில் விமானத்தில் பயணிக்கும் சூழலை உருவாக்கினார். இதன்‌மூலம் நமது வீரர்கள் பயணக் களைப்பின்றி போட்டிகளில் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டது. 

நமது வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி கிடைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக தமிழ்நாடு கூடைப்பந்து அணிக்கு செர்பியா நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளரை நியமித்ததன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை நியமித்த மாநிலம் என்ற பெருமையை ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்தார். இவர் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, போட்டித் தொடர்களை நுட்பமாகவும்,  பிரம்மாண்டமாகவும் ஒருங்கிணைத்தார். அவரது சொந்த செலவிலும், தன்னிகரற்ற தலைமையிலும் 9 சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தினார். அதில் 5 சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடந்தன. மேலும், ‌முதன்முறையாக தமிழ்நாடு ஆடவர் அணி தங்களின் சொந்த மண்ணில் தங்கம் வென்றதோடு, மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

ஆதவ் அர்ஜுனாவின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் அனைத்து இந்திய கூடைப்பந்து அணிகளும் அற்புதமாக தங்களது திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டு மேம்பாட்டில் பயிற்சியாளர்களின் இன்றியமையாத பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களை இன்னும் பெரிய உயரங்களைத் தொட ஊக்குவிக்கும் விதமாகவும் 73ஆவது சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அணிகளின் பயிற்சியாளர்களுக்கு கார்களை பரிசளித்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த அருமையான முன்னெடுப்பு இந்திய பயிற்சியாளர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர்

2021ஆம் ஆண்டு ஆதவ் அர்ஜுனா தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் விளையாட்டுக் கலாச்சாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும்‌ நோக்கத்தோடு 2024 ஜூன் மாதம் தமிழ்நாடு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ‌திட்டமிடலில் ஈடுபட்டு வருகிறார். 

என்றாவது ஒரு நாள் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் கூடைப்பந்துக்கான தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதும், பிற விளையாட்டுகளிலும்‌ தமிழ்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் அரங்கில் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்பதும் இவருடைய லட்சியங்கள் ஆகும். 

சமூகநீதிக்கான இலட்சியம்

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம், டாக்டர் பி ஆர் அம்பேத்கர், பெரியார், மார்ட்டின் லூதர் கிங், அண்ணா, ஆபிரஹாம் லிங்கன், மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய சிந்தனைத் தலைவர்கள் காட்டிய பாதையில் உருவாக்கப்பட்டது. பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எளிமையாகத் தேர்தல் வெற்றியின் மூலம் நடைமுறைப்படுத்தினார் அண்ணா. இதன் தீவிர தாக்கத்திற்கு ஆளான அர்ஜுனா 'தேர்தல் அரசியலே சமத்துவ கருத்துகளை அமல்படுத்தும் களம்' என்ற முடிவுக்கு வந்தடைந்தார்.

2015-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பங்களிப்பாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் அர்ஜுனா. 2019-ம் ஆண்டில் தேர்தல் தகவல் பகுப்பாய்வு மற்றும் பிரச்சார வியூகங்களை வகுக்கும் 'ஒன் மைண்ட் இந்தியா' நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு தேர்தல் பிரச்சார களத்தை நவீனப்படுத்திட பிரஷாந்த் கிஷோரை அழைத்து வந்து, மாநிலத்தின் தேர்தல் முறையை மறுசீரமைப்பு செய்ய ஐ-பாக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இவர்களின் வியூகம் 2021-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதன்பின், அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்துகொடுத்து ஏற்றதாழ்வு இல்லா சமத்துவ சமூகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அரசியலை முன்வைத்து One Mind India நிறுவனம் Voice of Commons என்கிற மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் 2022-ம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் காமென்ஸ் நிறுவனம் கைகோர்த்தது. முதலில் கட்சி நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் துவங்கி, டிஜிட்டல் முறையில் தரவுகளை கையாள தனி டாஸ்போர்ட் கொண்டுவரப்பட்டது. பெரிய கட்சிகளுக்கு இணையாக 15 ஆயிரம் வாக்குச் சாவடி முகவர்களுடன் பூத் கமிட்டி கூட்டம் ஒரு மாநாடுப் போல் சென்னையில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் திருச்சி சிறுகனுாரில் இந்தியா கூட்டணியின் முதல் மாநாடாகவே அறியப்பட்ட விசிக-வின் ‘வெல்லும் சனநாயகம் மாநாடு' இந்திய அரசியலுக்கே திருப்புமுனையாக மாறியது. அந்த மாநாட்டை கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி முன்னின்று நடத்தியது 'Voice of Commons' நிறுவனம். மாநாட்டு மேடையிலேயே அர்ஜுனாவைப் பாராட்டினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். அதேமேடையில், கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் இணைந்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து, ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிஜிட்டல் வடிவ பிரச்சாரத்திற்கு அடித்தளமிட்ட 'Voice of Commons' முதன்முறையாக QR வடிவ பிரச்சார யுக்தியைத் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தது. இந்த தேர்தலின் வெற்றிக்குப் பிறகு விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நச்சு சாராயத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிறகு விசிக சார்பாக மது ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தவர், உளுந்தூர்பேட்டையில் நடந்த 'மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு' மாநாட்டில் முக்கிய பங்களிப்பைச் செய்தார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவனின் நீண்டநாள் லட்சிய முழக்கமான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்பதை அரசியல் களத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்ததில் அர்ஜுனாவின் பங்கு முக்கியம் பெறுகிறது. ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகினாலும், தொல். திருமாவளவன் அவர்களின் சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் அதிகாரம், மதப் பெரும்பான்மைவாத எதிர்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுகள் ஆகிய கருத்தியல் திட்டங்களில் இணைந்து பயணிப்பதாக அறிவித்தார்.

புத்தக வெளியீடு: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்'

இந்தியாவின் தலைசிறந்த அறிஞரும் அரசியலமைப்பு சட்ட மாமேதையுமான டாக்டர். அம்பேத்கரின் சமூக போராட்டங்களைப் பற்றியும், அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர் அல்ல, மாறாக ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதையும் உணர்த்த வேண்டியது அவசியமான பணி. அம்பேத்கரின் வாழ்வு, அரசியல் சிறப்புகள், சமூக உரிமை போராட்டங்கள் என அனைத்தையும் உள்ளடக்கி இந்தியாவில் உள்ள தலைசிறந்த அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், தலைவர்களின் பங்களிப்போடு முதன்முறையாகத் தமிழில் அம்பேத்கர் பற்றிய முழுத் தொகுப்பாக வெளியானது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல்.

அர்ஜுனா தனது கொள்கை வழிகாட்டி என்று கூறும் அம்பேத்கருக்கு இத்தகைய தொகுப்பைக் கொண்டுவந்தே தீர வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த முனைப்பே இந்த புத்தக உருவாக்கத்திற்கான விதை.

'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நிறுவனமும், பதிப்பு மற்றும் ஊடகத் துறையில் பாரம்பரியமாக இயங்கி வரும் விகடன் குழுமமும் இணைந்து இந்த நூலைத் தயாரித்து வெளியிட்டார்கள். 2024-ம் ஆண்டு அம்பேத்கர் நினைவுநாளான டிசம்பர் 6 அன்று சென்னையில் பிரமாண்டமாக வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அம்பேத்கரைத் தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அறிவித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அம்பேத்கர் குடும்ப உறுப்பினரும் இந்தியாவின் தலைசிறந்த அறிஞருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் மேனாள் நீதிநாயகம் சந்துரு ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரின் கருத்துரைகளும் பார்வையாளர்களுக்கு அபாரமான சிந்தனையைத் தூண்டின.

அம்பேத்கரை அனைத்து மக்களின் தலைவராகத் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் ஈடுபாட்டோடு வெற்றிகரமாக நூல் தயாராகி இன்று எல்லோர் கையிலும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' சென்று சேர்ந்திருக்கிறார். இந்த மாபெரும் அறிவு மற்றும் கலாச்சார பங்களிப்பை வழங்க வேண்டும் என்று விரும்பிய ஆதவ் அர்ஜுனாவின் இலக்கு வெற்றியடைந்தது. அம்பேத்கரின் சிந்தனைகளை மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்த்ததன் மூலம் ஆதிக்கத்திற்கு எதிரான சமத்துவ, சமூகநீதி போராட்ட மரபில் குறிப்பிட்ட பங்களிப்பை இது ஏற்படுத்தியது.

அறிவுத்துறையில் மைல்கல்லாக அமைந்த இந்த நிகழ்வோடு, சமூக நீதி மற்றும் எளிய மக்கள் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் இலட்சியத் திட்டங்களில் அம்பேத்கரின் கருத்தியல் துணையோடு கொள்கை பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

முன்னாள் நிறுவனர் - அரைஸ் கேபிட்டல்

சமூக முன்னேற்றத்தில் அனைவரையும் உள்ளடக்கும் பொருட்டு, அனைவருக்குமான வாய்ப்பை வழங்கும் விதமாக 'உழைக்கும் மகளிருக்கு' எந்தவித அடமான ஆவணங்களுமின்றி கடன் வழங்கும் நிறுவனமாக 'அரைஸ்' தொடங்கப்பட்டது. எளிய மக்களின் சுமுகமான நிலைக்காக இது தொடர்ந்து விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அர்ஜுனாவின் தலைமையின் கீழ் 1500 பணியாளர்களுடன் 150 கிளைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது 'அரைஸ் குழுமம்'. இதன் மூலம், 3.5 இலட்சம் பயனாளர்களுக்கு 3000 கோடி வரை கடனுதவி வழங்கி எண்ணற்ற மக்கள் வாழ்வில் முன்னேற்றகரமான தாக்கம் செலுத்தியது அரைஸ். 'நாட்டில் வறுமையின் காரணமாக எந்தவொரு பெண்ணின் வாழ்வும் சிதைந்துவிடக்கூடாது' என்ற எண்ணமே இந்த நிறுவனம் தொடங்குவதற்காக உந்துதல். அரசியல் பயணத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக 2024-ம் ஆண்டு 'அரைஸ்' குழுமப் பொறுப்புகளிலிருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா. அவரின் சமூகப் பொறுப்புடன் கூடிய தொழில்முனைவாளர் ஈடுபாடு பல மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

Aadhavarjuna

கொடை மற்றும் சமூகப் பங்களிப்பு

கொரோனா நிதியுதவி: 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினார். 

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி: இயற்கை பேரிடரால் மக்கள் தாங்கொணாத துயரத்தில் அல்லல்படும் நெருக்கடியான நேரங்களில் அர்ஜுனா அவர்கள் களத்தில் இறங்கி தஞ்சை, நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 

கொரோனா தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு: கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிக்கு துணைபுரியும் வகையில் அர்ஜுனா தனது சொந்த செலவில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான இலவச தடுப்பூசி முகாமை நடத்தினார். இதன்மூலம் 500-600 விளையாட்டு வீரர்கள் பயனடைந்தனர். 

இயற்கை பேரிடர் உதவிகள்: 2015 வெள்ளத்தின்போது ஆதவ் அர்ஜுனா சாந்தோம் பள்ளிக்கு தேவையான பொருட்களையும், கல்விக்கான உபகரணங்களையும் வழங்கினார். 

கணினிக் கூடம் உருவாக்கம்: திருச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதிய கணினிக் கூடத்தை அமைக்க அர்ஜுனா உதவியதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தினார். 

பிறந்தநாளன்று உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி: ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பிள்ளைகளுக்கு காலணிகள் உள்ளிட்ட பொருட்களை அர்ஜுனா வழங்குவதன் மூலம் அந்த இளம் பிஞ்சுகள் மீது அவருக்குள்ள அன்பையும், அக்கறையையும் பறைசாற்றுகிறார். 

கல்வி உதவித்தொகை: ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவதில் கல்விக்கு உள்ள சக்தியை உணர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா ஏராளமான மாணவர்களின் கல்விக்கான செலவு முழுவதையும் ஏற்றிருக்கிறார். 

நன்கொடை மற்றும் நிதியுதவி: அர்ஜுனா அவர்கள் புத்தகக் கண்காட்சியின் போது தமிழ்நாடு சிறைத்துறைக்கு புத்தகங்கள் அன்பளிப்பு, காயமடைந்த விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்கு நன்கொடை அளித்து சமூக நன்மைக்கு துணை நிற்கிறார். 

அவரது வருமானத்தின் கணிசமான பகுதி நமது நாட்டில் கூடைப்பந்து விளையாட்டின் மேம்பாட்டிற்காக செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கை

அர்ஜுனா ஏப்ரல் 12 அன்று தமிழ்நாட்டின் திருச்சி மாநகரத்தில் பிறந்தார். அவரது தாயார் கல்வியில் சிறந்து விளங்கினார். தாயார் கல்யாணி திருமணத்திற்கு பிறகு விவசாயியான தனது கணவர் ராஜேந்திரனுக்கு விவசாயத்தில் உறுதுணையாக இருந்தார். கெடுவாய்ப்பாக அர்ஜுனா 5வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட கடும் வறட்சி அவரது குடும்பத்தை வறுமையில் ஆழ்த்தி, இறுதியில் அவரது அன்புத் தாயாரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த இழப்பு அர்ஜுனாவுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகத்தான் அவர் தொழில்முனைவோராக உயர்ந்து, ஏராளமான கிராமப்புற பெண்களுக்கு நிதியுதவி கிடைக்க வழிவகுத்தார். மேலும், இந்தியாவில் ஏற்படவேண்டிய அரசியல் மாற்றம் குறித்த ஆர்வத்தோடு கல்லூரியில் அவர் அரசியல் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து பயிலவும் இதுவே காரணமாக அமைந்தது.  

அர்ஜுனாவின் வாழ்வியல் அடுத்த திருப்புமுனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் அவர் தங்கியிருந்தபோது போதிய நிதியுதவி கிடைக்காத காரணத்தால் ஏற்பட்ட சக விளையாட்டு வீரனான தனது நண்பனின் மரணமேயாகும். இந்த இழப்புதான் அர்ஜுனாவை 'விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்ற லட்சியத்தோடு விளையாட்டு சங்கங்களின் நிர்வாகத்தில் ஈடுபட உந்தித்தள்ளியது. வறுமை நிறைந்த அர்ஜுனாவின் இளம் பருவத்தில் நூலகம் ஒன்றுதான் அவர் இளைப்பாறுவதற்கு ஏற்ற வசந்தமான இடமாக அமைந்தது. அரசியல், விளையாட்டு, வணிகம் ஆகிய துறைகளில் தனது பாத்திரங்களை சிறப்பாகக் கையாளும் அர்ஜுனா, இந்த மூன்று துறைகளும் சமூகத்தின் கூட்டியக்கத்தை பிரதிபலிப்பதாகக் கருதுகிறார். விளையாட்டு சமூக ஒற்றுமையை ஏற்படுத்துகிறது, வணிகம் வளர்ச்சிக்கு விதையாகிறது, அரசியலானது சமூகப் பொருளாதாரக் கொள்கையை உருவாக்குகிறது என்பது அர்ஜுனாவின் நம்பிக்கையாகும். விளையாட்டு வீரர்கள் தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால் அவர்களுக்கு உயர்தரமான வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அர்ஜுனா, விளையாட்டு மேம்பாட்டிற்காக தன்னால் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்து வருகிறார்.

அர்ஜுனாவுக்கு திருமணமாகி அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு பிடித்த பணிகள் புத்தகங்களை வாசிப்பது, தேர்தல் வியூகங்கள் குறித்து சிந்திப்பது மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியனவாகும். எப்போதும் அவர் நேசிக்கும் கூடைப்பந்து விளையாட்டுதான் இளமைக்காலம் முதல் இன்று வரை அவரது வாழ்வின் இன்றியமையாத பகுதியாகத் திகழ்கிறது.  

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

சிறந்த விளையாட்டு நிர்வாகி: 2022ஆம் ஆண்டு விளையாட்டுத்துறையில் அர்ஜுனா அவர்களின் சிறப்பான தலைமைத்துவத்தையும், பங்களிப்பையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஊடகமான ஆனந்த விகடனின் 'நம்பிக்கை' விருது வழங்கப்பட்டது.

விளையாட்டு ஆளுமை: விளையாட்டுத் துறையில் ஆதவ் அர்ஜுனாவின் சாதனைகளுக்கு மகுடமாக அவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான கலாட்டா க்ரவுன் விருதுகள் சார்பாக 'ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு ஆளுமை' என்ற விருது வழங்கப்பட்டது. 

சிறந்த ஒருங்கிணைப்பாளர்: முதலமைச்சர் விருதுகளில் அர்ஜுனா அவர்களின் தன்னிகரற்ற ஒருங்கிணைப்புத் திறனை பாராட்டி அவருக்கு தமிழ்நாடு அரசு  2019ஆம் ஆண்டுக்கான 'சிறந்த ஒருங்கிணைப்பாளர்" விருதை வழங்கியது. இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். 

வலையொளிப் பக்கம்

புகைப்படங்கள்

கட்டுரைகள்